Thursday, October 29, 2009

தற்காலிக குடிப்பெயர்ச்சி!


“Have you been to states before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
“No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”
“yeah…I could have been… But…”

-இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..

அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்கன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..

ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
 

-சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை  அளபறைய குடுத்திட்டிருப்பாங்க

ஆன்சைட் - மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.

சரி ஆன்சைட்னா என்னாங்க?



ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேலை ஆகனும்னாஇந்த மாதிரி இந்த மாதிரி வேலை ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பெனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சுஎனக்கு செய்னு, எனக்கு மோதரம்னுமன்னன் படத்துல ரஜினி கௌண்டமணி மாதிரி கெடைக்கற பீஸ் ஆப் ப்ரொஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட்டுக்கு பூஜைய போட்ருவாங்க…. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும்னு  பக்கத்துலையே இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்ட வேலைய (உயிரை)  வாங்கற process தான் Onsite-Offshore co-ordination.

இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான் கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி  மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க..
இப்ப அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்

அப்படி போறதுனால என்னங்க
நல்லா கேட்டிங்க….

** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!
** நம்ப negotiation skills ம், business communication ம் நல்ல இம்ப்ரூவ் ஆகும்!
** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய(கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கெடைக்கும்.
** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்… 
 அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்

அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த ஈபில் டவர், லண்டன் பிரிட்ஜ், பிரமிட், சுதந்திரதேவி சிலை, பைசா கோபுரம் இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறைச்சு பார்த்து பல ஸ்டில்லுகல எடுத்து மொத வேலையா ஆர்குட்லயோ, பிக்காசலயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்

இங்க அவனவன் 38 degree  வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு snow fall வெளயாடறா  மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.
மொத்தத்துல மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு resource ஆன்சைட் அனுபறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரி

மூத்தவ நல்லா  பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா….போக போக பழகிரும்மத்த படி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருகங்கற மாதிரிஇவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட் கிட்ட சொல்லி எப்படியாவது ஆன் சைட் அனுப்பிருவாங்க.
 

அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களாங்கறா மாதிரி சீனியர் resourse வெச்சு கிட்டு ஜூனியர்யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க… resourse

ப்ராஜெக்ட் வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டுநம்ப கிட்ட ஏற்கனவே குழாய்வழியா (Pipeline ) இருந்தவருமோவராதோப்ராஜெக்ட் வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிகோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் நெசமாத்தான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி  ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ-ரெகார்டிங் இல்லாமையே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத  சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்குஏங்கடாபோங்கடாப்ரொஜெக்ட கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் “I am Back” ன்னு தரைக்கே வருவாங்க..அப்பறம் கொஞ்ச நாளைக்குவார்த்தை தவறிவிட்டாய்ன்னு ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! . “

ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலையும் அவுல போட்ட மாதிரி ஆயிரும்…. அவன் போவான் இவ போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்

மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க… “ஒன் டே squad ரெய்னாவுக்கு பதில கைப்ப எதுக்கு எடுத்தாங்கங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அதுக்கப்றம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.

ஆன்சைட் போனவன்  “அக்கறை சீமை அழகினிலே”, நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டையின் பண்ணிகிட்டிருப்பான்….நம்பாளுசொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என்பேருன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.

சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் work permit எடுக்கணும் அப்பறம் visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும்.
US னா ஒரு வருஷம் ஆகும். அது வரைக்கும் நம்ப உசுரோட இருக்கோமோ இல்லையோ) Uk னா ஒரு மாசம் ஆகும். இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமான வெளிச்சம் என்னன்னா ஒரு கம்பெனி எத்தன விசாவ consulate submit பண்ணாலும், வருசத்துக்கு இவளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு….

அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்அதுக்கும் பொறகுகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்சு, ஏன் போற எதுக்கு போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கற மாதிரி கேட்டு, கொடஞ்சு நம்ப பாஸ்போர்ட்ல குமுக்குனு ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக இல்லேனா மந்திரிச்சு உட்ட மாதிரி ஆயிருவானுக! ( (highlight)! consulate computerised

இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே….அறிஞர் அண்ணா சொன்ன மாதிரிவிழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்குன்னு இருக்கறவன்சந்தோசமா இருப்பான். “இந்த சாப்ட்வேர் வேலை எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன்…US என்னோட 25  வருஷ கனவு, தவம்னு கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு குவாட்டர் அடிச்ச கொரங்கு மாதிரியே திரியுவானுக!

நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK தான் ஆன்சைட் அமையும்சரி ஒரு வழியா விசா கிடைச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அது வரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பான்னு இந்த கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான்

இல்ல சினிமால சொல்றாப்ல  “உனக்கு அவதான், அவளுக்கு நீ தான்னு சின்ன வயசுலேயே முடிவாயிருச்சுங்கற மாதிரி நம்ம நேரம் வொர்க் அவுட் ஆயிருச்சுன்னா டபுள் ஓகே.. இப்போ  அடுத்து கிளையன்ட் எப்போ கூப்பிடுவான்னு காத்திருக்கணும்அப்டியே தோராயமா எப்போ கெளம்பறோங்கறத நம்ப மேலதிகாரிங்ககிட்ட கேக்க வேண்டியதுதான்அவங்களும் monday கெளம்பற மாதிரி பாத்துக்கோங்கன்னு சொல்லுவாங்க, ஆனா எந்த monday னு அவங்களும் சொல்ல மாட்டங்க நாமளும் கேக்க மாட்டோம்

வாரக்கணக்கு நாள்கணக்கு ஆனவொடனே நம்பளும் இந்த தடவ கெளம்பிருவோம்போல தெரியுதேன்னு  பர்சேசிங்கையும், பாக்கிங்கையும் ஆரம்பிச்சுருவோம்.Financial settlement கள், சிம் கார்டு சரண்டர்கள்னு நாட்கள் பரபரப்பா போயிட்டிருக்கும்.
 

இதுக்கெடைல நம்ப பாசக்கார பய புள்ளைக அப்பப்போ போன் பண்ணி கண்டவனெல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரிய வேண்டி இருக்குன்னு பீலிங்க வேற போடுவானுகஇதுல என்ன கொடுமைனா ஏற்கனவே ரெண்டு தடவ வெறும் டாட்டா மட்டும் சொல்லி  பல்பு வாங்குனது அவனுக்கும் நல்லாவே தெரியும்

திடீர்னு ஒரு சண்டே நம்ப பெத்தவங்க  ஊர்ல  இருந்து பாசம், கவலை, பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு கலவையா வந்து நிப்பாங்க.. அவங்களுக்கு என்னன்னா நாம எதோ வெளிநாட்டுல போய் ராக்கெட் செஞ்சு சந்திர மண்டலத்துல உடற மாதிரி நெனைச்சுக்குவாங்க. அங்க போய் நாம எந்த மாதிரி வேலைய பாப்போங்கறது நமக்கு தான தெரியும்.
 

ஆனா ஒன்னுங்க இன்னிய வரைக்கும் அவங்க வந்தன்னைக்கு நம்பல சென்ட் ஆப் பண்ணதா வரலாறு-பூகோளம்-புவியியல் எதுவுமே இல்லைங்க.. சரி அவங்களும் தாமதமான சந்தோஷம்னு நம்போட கொஞ்ச நாள் இருக்க ஆசப்படுவாங்க. அந்த பரபரப்புல  ரெண்டு நிமிஷம் கூட அவங்களோட சந்தோசமா உக்காந்து பேச முடியாது.

நாள்கணக்கு மணி கணக்கா ஆயிரும்கெளம்ப வேண்டிய கடைசி நாளும்வந்திரும்அந்த கடைசி நாள் இந்தியா பாகிஸ்தான் பைனல்  ஓவர் மாதிரி, எப்படி 40 ஓவர்ல ஜெயிக்க வேண்டிய மேட்ச 50வது ஓவர்ல நெகத்த கடிக்க வைச்சு ஜெயிப்பாங்களோ, அதே மாதிரி தான். ஒவ்வொருத்தரயா புடிச்சு தொங்கி எல்லா formalities ஐயும் முடிச்சிட்டு, அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட்டயும், உருண்டு பெரண்டு ஊர் காசையும் வாங்கிட்டு  கடைசியா செய்ய வேண்டிய சீரு, அதாங்க நம்போட கலீக்ஸ் மற்றும் நண்பர்களுக்கு treat குடுத்திட்டு..அப்படியே சின்னதா ஒரு தற்காலிக பிரிவு உபசார விழாவுல கலந்த்துகிட்டு, மேலதிகாரிங்க கிட்ட புத்திமதிகள மாறக்காம வாங்கி(கட்டி)ட்டு("மச்சி, இன்னிக்காது எப்படியாச்சு அவ கிட்ட சொல்லிடு”…  
கதைகளும் கேப்புல கெடா வெட்டிட்டு தான் இருக்கும்) வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நம்பளுக்கே லைட்டா ஒரு நம்பிக்க வரும்

அதுதான் எல்லாம் கெடச்சிருச்சே அப்பறம் என்ன லைட்டான்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கும். ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிடு போனவனெல்லாம் காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா  

(டேப்பரான்னா, தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைசா உக்காந்திருபாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம்  இருக்குஅது பெரிய கொடுமைங்க..என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் எதோ எழவு விழுந்த மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க.. இது பரவால்ல பம்பாய்ல கனெக்க்ஷன் ப்ளைட் ஏறப்போறவன போன் போட்டு கூப்பிட்டு,  தம்பி கிளையன்ட் சைடுல எதோ ஏழரை ஆயிரிச்சு..போனவரைக்கும் போதும் பொட்டாட்ட திரும்பி வந்திருன்னு சொல்லிருவாங்க..அது சேரி நமக்கு நேரம் சரியில்லேனா ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான செய்யும்

இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பய பட்சி நொண்டி அடிச்சுகிட்டே இருக்கும். இந்த தடவையாவது எல்லாம் சரியா நடக்கனும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சிரும். நம்ப நலம் விரும்பிகள், நண்பர்கள்னு ஒவ்வொருத்தரா வந்து பயணத்துக்கான துணுக்குகளையும், நடந்துக்க வேண்டிய வழிமுறையையும் சொல்லி குடுத்துட்டே  கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க. நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கெளம்பற வரைக்கும் அத வாங்கிட்டியா, இத வாங்கிட்டியான்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும்கெடைக்கறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிரும்

விடியக்காலம் ப்லைட்டுனா ராத்திரி  பதினொரு மணி வரைக்கும் மசமசப்பாவே இருக்கும்.. அதுக்கப்றம் தான் நம்ப பெத்தவங்களோட கொஞ்சம் நேரம் மனம் விட்டு  பேச முடியும்!
இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அப்பத்தா போன போட்டுஉனக்கு தண்ணில கண்டம்னு உடுமல ஜோசியர் சொல்லிருக்காரு, நீ தண்ணி பக்கமே போகாத, போற பக்கம் சூதானமா இருந்துக்கோ, வம்பு தும்புக்கு போகாத சாமின்னு பத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும். திடீர்னுஎன்னைய இப்பவே காடு வா வாங்குது வீடு போ போங்குது.. இன்னிக்கோ நாளைக்கோ நான் போய் சேந்துட்டன்னா..நீ வந்து நெய் பந்தம் புடிச்சாத்தாண்ட என் கட்ட வேகும்னு”  பொசுக்குனு அழுக ஆரம்பிச்சிரும்..”இல்லாத்தா உனக்கு ஒன்னும் வராது, நீ இன்னும்  நான் பேரம்பேத்தி எடுக்கற வரைக்கும் இருப்பேன்னு நாம்பளும் சமாதானப்படுத்துவோம்.அதுலயும் சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவுந்திருவாங்க.. “
மனசெல்லாம் பாரமாகி அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணா அசந்தம்ன்னா. “ஏன்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா? ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரின்னு எக்கோல ஒரு குரல் கேக்கும் முழிச்சு பாத்தா நம்பப்பா சும்மா புது மாப்ள மாதிரி ஜம்முனு கெளம்பி ரெடியா இருப்பாரு! கண் எரிச்சலோட நம்ப  நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிருவோம்.
நம்ப பாசக்காரப் பசங்க எப்பவுமே ஸ்வீட் பாக்ஸ கிலோ கணக்குல வாங்கி குடுப்பானுக.. ஏன்னா ப்ளைட்ல போறதுக்கு முன்னாடி இவளோ தான் லக்கேஜ் எடுத்திட்டு போகன்னும்னு ஒரு கணக்கு உண்டு..அதிகம் ஆகி 3  கிலோவ எடுத்திருங்கன்னு சொன்னா,  ”மச்சி அந்த மைசூர் பாகும், பிஸ்தா கேக்கும் சரியா மூணு கிலோ வராதுன்னு? நல்லவனுக மாதிரியே கேப்பானுக!! இதுவும் கூட ஒரு வகையான Give and take policy தான்.

மணிக்கணக்கு நிமிசக்கணகக்காயி சட்டுன்னு சூழ்நிலை அப்படியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிரும்பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்கபயலுக வேற திடீர்னு எதோ சந்தானம் சூரியாவுக்கு அட்வைஸ் பண்ணற மாதிரிமச்சி பாத்துக்கோடான்னு ஒரு மாதிரியான வாய்ஸ்லபேசுவானுக!  

நிமிசக்கணக்கு நொடி கணக்காயிடும்
மௌனத்தின் சத்தம் மட்டுமே கேட்கும் நேரங்கள்!
கடைசி நொடியில் அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்குபிறகு ஒரு அன்பு முத்தம்
ஆருயிர் நண்பர்களின் கதகதப்பன தழுவல்
யாருக்கும் கண்களில் கண்ணீர் முட்டும் தருணம்
கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கையசைத்து விடை கொடுத்துவிட்டு..எல்லா செக்யூரிட்டி, எமிகரேசன் சம்பரதாயங்களையும் முடித்து விட்டு loungeல் ஒரு மணிநேரம் காத்திருப்போம்.அப்போது தான் நாம் தனிமைப்பட்டதை  உணர்வோம்..ஒரு வெறுமை வந்து மனதை ஆக்ரமித்து கொள்ளும். சொல்லப்போனால் உண்மையான நம்மை  வெளியே தற்காலிகமாக தொலைத்து விட்டு மாயையான புது மனிதனாய், புதிய ஊருக்கு, புதிய கலாச்சாரம், புது உறவுகளுக்கு நம்மை அர்ப்பணிக்க தயாராகி விடுவோம்.நாம் கண்டிப்பாக நிறைய சந்தோசமான தருணங்களைநண்பர்களின், உறவினர்களின் திருமணம், சொந்த ஊரில் பண்டிகைகள், காலை நேர FM, மாலை நேர சேட்டிலைட் சேனல்கள், முதல் நாள் சினிமா, இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள், பைக்கில் நகர்வலம்  இப்படி நிறைய)  தவறவிடுவோம்கடைசி நேர போன்களில் நேரம்  கரைந்து கொண்டிருக்கும். ஒரு வழியாக ப்ளைட்டில் போர்டு ஆகி மேலெழும் போது நகரம் ஒரு புள்ளியாகி பதினைந்தே நிமிடங்களில் வெறும் மேகம் மட்டுமே நம் மனதை போலவே வெறுமையாக புலப்படும்.

(சரிபுரியுதுஎன்னங்க பண்றது, நமக்குள்ள எப்பவுமே ஒரு சேரன் அலர்ட்டாவே இருக்கான்!!..)    

சில பேரு வெளிய வால்டேர் வெற்றிவேல் மாதிரி வெறப்பா இருந்துட்டு உள்ள வந்து டாய்லெட்ல து..து விஜய் மாதிரி  தேம்பித்தேம்பி  அழுதிட்டு இருப்பானுக.

சில பேரு இந்த LKG  ஸ்கூல்ல மொத நாள் கொழந்தைக உக்காந்த்திருக்குமே அதே மாதிரியே கடைசி வரைக்கும் உப்புன்னு உக்காந்திருப்பனுக.  

சில பேரு காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒயின், விஸ்கின்னு கெடைக்கறதெல்லாம் வாங்கி, கலக்க வேண்டாம் நாம் அப்படியே சாப்பிடுவேன்னு ராவடி பண்ணிட்டு இருப்பாங்க..

சத்தமே இல்லாம சில பேரு சைலன்ட்டா இருப்பான், என்னடான்னு பாத்தா பக்கத்து சீட்ல பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு உக்காந்திருக்கும். ஊர்ல குண்டாவுல ஊத்தி குடிக்கறவனா இருப்பான்,  

ட்ரிங்க்ஸ் சர்வ பண்ணா, ஏதோ வேப்பெண்ணைய குடிக்க சொன்ன மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டுநோ தேங்க்ஸ்.. யம் நாட் யூஸட் டு இட்ன்னு சைடுல  பாத்தபடியே ஒரு கோல போடுவான்.  

அவ வழக்கம் போல இவன மதிக்காம டான்பிரவுன் புக்க படிக்க ஆரம்பிச்சிருவா.
பாதி தூக்கம், கொஞ்சம் இசை, ஒரு முழு நாவல், ஒரு புரியாத திரைப்படம்னு.. நாம எறங்க வேண்டிய ஊரு வந்திரும் (UK ன்னு வெச்சுப்போம் - ஏன் மாஸ்டர் எப்பவும் இதே ஸ்டெப்ப போட்றீங்க….இது ஒன்னுதான எனக்கு தெரியும்..) லக்கேஜ கலெக்ட் பண்ணலாம்னு போனா, கன்வேயர்ல வர எல்லா பொட்டியும் காக்காவாட்டம் ஒரே மாதிரி இருக்கும்..ஒரு வழியா நம்ப பொட்டிய கரெக்டா கண்டுபுடிச்சு எடுத்திட்டு அடுத்த முக்கியமான கட்டத்துக்கு போகணும்.
அந்த ஊரு இமிகரேசன்  செக்கிங்..

ஒரு ஜாக்சன் அங்கிள் லோக்கல் ஆக்சன்ட்ல கேள்வி கேப்பாரு..
“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
(என்னது கொழாய்ல தண்ணி வரலையா? ) பார்டன் மீ..
“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
(என்னது எம்.ஜி.ஆர் உயிரோட இருக்காரா?) பார்டன் மீ..
“!@#!#  %$^#@#!@#  ^%#$%&^* ^#$@#@”
…. வொர்க் ஃபார்……. (இப்போ தான் இதையே சொல்லிருக்கோம், மொத்தமும் சொல்றதுக்குள்ள.. வெடிஞ்சிரும்.)

பார்டன் மீ, பார்டன் மீன்னு பத்து தடவ பாட்டு பாடி.. ஒரு வழியா கேள்விக்கு பதில சொல்லி அவன் சீல் குத்தறதுக்குள்ள நமக்கு பொறந்த நாள் கண்டுரும் .

அப்புறம் நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விஷேசம், இல்லேனா குஷ்டந்தான்..திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான்..அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான்  பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எருமை மாடு தெரியப்போகுது..)   தட்டுத்தடுமாறி கேப் புடிச்சு நம்ப கலீக்கோடா ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட ஐக்கியமாயிர வேண்டியது தான்.

ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:
** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனெக்ஷனோட ஒரு லேப்டாப்.
நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம், நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான். சாயங்காலம் வந்தோடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத் துனு உக்காந்திர வேண்டியது தான்.

அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:
1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்..
நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறான், கால்ல  பட்டாவே. பத்துதடவ தொட்டு கும்புடுவான்.
2. காலநிலை மாற்றம்
வெயில் காலத்துல வெளிச்சமும், குளிர் காலத்துல இருட்டும் ஜாஸ்த்தியா இருக்கும். நீங்க சாயங்காலம் எவளோ லேட்டா வீட்டுக்கு வந்தாலும் நேரத்துலையே வந்த மாதிரி ப்ரெஷ்சாவே இருக்கும். ஏன்னா வெயில் காலத்துல பத்துமணிக்கு தான் கொஞ்சம் லைட்டா இருட்டும்.நைட் கொஞ்சம் லேட்டா பசங்களோட பேசிட்டு இருந்தம்னா திடீர்னு விடிஞ்சிரும்.குளிர் காலத்துல இதுக்கு நேர்மாறு, 3 மணிக்கெல்லாம் இருட்டீரும். எப்பவுமே நைட் ஷிப்ட்ல இருக்கற பீலிங் இருக்கும்.கன்னிப்பொண்ணு மனசு மாதிரியே வானிலை இருக்கும், பத்து நிமிஷம் அப்படியே இருட்டு கட்டி மழை பேயும், அப்புறம் பாத்தா இன்னிக்கா அப்படி பாத்தங்கறா மாதிரி சுள்ளுன்னு வெயிலடிக்கும்.

வேல ரீதியா பாத்தா ஒன்னும் பெருசா வித்யாசம் இருக்காது..அதே வேலை, ஆனா வெள்ளைக்கார மொதலாளி. நமக்கு கிளையன்ட் நல்ல படியா அமையனும் அது ரொம்ப முக்கியம், அத விட முக்கியம் off-shore team (அந்த எட்டு பேரு) சரியா வாய்க்கனும் இல்லென சிக்கி சீரழிய வேண்டியதுதான். விடிய விடிய உக்காந்து ட்ரான்ஸ்சிசன் குடுத்திட்டு காலைல திரும்ப வந்து கேட்டாராமனுக்கு பொண்டாட்டி ரம்பான்னு சொல்லுவான் அகராதி புடிச்ச பயபுள்ள. “

நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,
அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”..
பொன்னி அரிசிலேருந்து முருங்கைக்காய் வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும். 
ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறதா தவிர எல்லா வேலையும் துல்லியமா செய்வான்! வேற வழி?
நம்புடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திரும்
குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக.  


ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக. பசங்க நாலு பேரு ஒரு வீட்ல இருந்தா கூட, ஒரே அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது  எரியும். சரி, பிரச்சன திசை மாறுது
அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்லலே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா பனியில நனைஞ்ச புஷ்பம் மாதிரின்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட வெள்ளைகார தேவதை நல்ல பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்…  அசிங்கத்த மிதிச்ச மாதிரி அப்பறமாதான் அடங்குவான்

வெள்ளக்காறன பொருத்தவர ஒவ்வொரு வீக்எண்டும் தீபாவளி மாதிரி..திங்கக்கெழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா  இருப்பானுக.. வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக.  5 மணியில இருந்தே அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்பு வாங்கவேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.

நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவேஅதுங்க வந்திருச்சுன்னுஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்கஇங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும்..இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!
இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு வாரத்துக்குத்தான்.. ஐஸ்வர்யாராயே பொண்டாட்டியா வந்தாலும், அந்த பெருமை, சந்தோசமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..அப்புறம் அவ ஒழுங்கா சமைக்க மாட்டேங்கறா, ஒரு சைடா நடக்கறான்னு எதாவது கொற சொல்ல ஆரம்பிச்சிருவோம்.பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை போர் அடிக்க ஆரம்பிச்சிரும். நாம ஊருக்கு திரும்பிப்போற நாள பத்தி கற்பனை பண்ண ஆரம்பிசிருவோம்.

மொத்ததுல இந்தரீல் பாதி, ரியல் பாதிஜெகன் ஸ்டைல்ல சொல்லனும்னா,
ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, உள்ள இருக்கறவன் வெளிய வரனும் நெனப்பான், வெளிய இருக்கறவன் உள்ள போகனும் நெனப்பான்.

பின் குறிப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள யாவும் யாருடைய வாழ்க்கையோடாவது ஒத்துப்போவதாக இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

0 comments: